Wednesday 6 February 2013

விஸ்வரூபம் - விமர்சனம்.


இமைப் பொழுதும் என் நெஞ்சை விட்டு நீங்காத இசக்கித்தாயின் இணையடிகள் சரணம்.
விஸ்வரூபம் – விமர்சனம். 



 “ .. ஆமாலே.. ஒலகநாயகந்தாம்லே........”  தசாவதாரம் படத்தில் பூவராகவனாக நடித்த கமலஹாசன் சொல்லும் இந்த வசனம் எத்தனை சத்தியமான உண்மை என்பதற்கு ஒரு சாட்சி இந்த படம். உலக வரைபடத்தில் எங்கோ ஓர் மூலையில், இருக்கும் தொன்மை இனம் ஒன்று, இன்னும் உலகின் மீதான அதன் அறிவுப்பூர்வமான தாக்கத்தை முடித்துக்கொள்ளவில்லை என்பதற்கான அத்தாட்சி இந்த படம்.
தமிழ் திரையுலகின் தரம் உலக அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது இந்த திரைப்படத்தின் மூலம். இந்த படம் பார்க்கப்படுவது, கமலுக்கு நல்லதோ இல்லையோ, பார்ப்பவர்களுக்கு நல்லது என்று நான் சொல்லுவேன். ஒரு இரசிகனின் தரத்தை இரண்டரை மணி நேரத்தில் உயர்த்திக்காட்டுகிறது இதன் கதையமைப்பு. நாம் அறிந்துகொள்ளாமலேயே ஒரு திரைக்கதை இரசனை கல்வி, நமக்கு கற்பிக்கப்படுகிறது. சாமான்யனால் இந்த திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதிவிட முடியாது. திரைப்படங்களைப் பொறுத்தவரையில் நான் அந்த நிலைக்கும் கீழானவன். நான் அதிகமாக இதை புகழ்வதற்கு அதுகூட காரணமாக இருக்கலாம்.
நம்மை நாம் இருக்கும் இடம் அறியாத அளவுக்கு, கதையுடன் நம் மனதையும் அறிவையும் கரைத்து, ஒவ்வொரு நொடியும், அடுத்து நடக்கப்போவது என்ன என்ற ஆவலால், இருக்கையின் நுனியில் இருக்க செய்கிறார் கமல். திரைக்கதையை கொஞ்சம் கூட நாம் சித்தரிக்க முடியாத அளவுக்கு கதையம்சத்தை அசுரவேகத்தில் நகர்த்தி நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் கலையை கமல்ஹாசன் திறம்பட செய்திருக்கிறார். அகண்டு விரிந்த வெள்ளைத்திரையில் அவரது ஒளிப்படக்கருவி காட்டும் ஜாலம் நம் உள்ளத்தை கொள்ளைகொண்டு மயக்குகிறது. திரைப்படம் முடிந்து வெளியே வந்தபோது, என் இரசிப்புத்தன்மையும், தமிழ்த்திரையுலகின் மீதான என் அடுத்த எதிர்பார்ப்பும் பெருமளவில் உயர்ந்திருந்தது எனக்கு தெரிந்தது. திரையறிவில் நான் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன். ஆக, இந்த படத்தை நான் அறிவு போதித்த ஒரு ஆசானாக பார்க்கிறேன். மிகையல்ல இது. உண்மை.
கதையின் சிறு பகுதியை கூட நான் இங்கே எழுதிவிட விரும்பவில்லை. அதை ஒவ்வொருவரும் திரையரங்கில் சென்று பார்த்துவர வேண்டும். ஆனால் இந்த படம் நிச்சயம் முகமதியர்களுக்கு எதிரானது இல்லை. மாறாக அவர்களை பெருமையாகவே பேசுகிறது என்பது என் கருத்து. படம் வெளிவந்து, கருத்துக்கள் உலாவரும் வேளையில் இந்த படம் ஏன் எதிரானது இல்லை என்பதையும், எப்படி இது அவர்களை ஆதரிக்கிறது என்பதையும் எழுதுவேன். இப்போதே அது விளக்கப்பட்டால், கதைக்குள் நான் புகவேண்டிய கட்டாயம் வரும். தமிழகத்தில் இன்னும் படம் வெளிவராத சூழலில் அதை நான் விரும்பவில்லை.  படத்தின் பெரும்பகுதியை தீவிரவாதிகளின் வாழ்க்கை முறை அடைத்துக்கொள்கிறது. கமலஹாசனின் இந்திய வாழ்க்கை கொஞ்சம் காட்டப்பட்டு இருந்தால், இந்த எதிர்ப்பு வந்திருக்காது என்பது எனது சிந்தை. ஆனால் அது விஸ்வரூபம்-2  ல் அது காட்டப்படும் என்று படம் முடிந்தபிறகு காட்டப்படும் அதற்கான முன்னோட்டத்தில் கமல் சொல்லியிருக்கிறார். அதுவும் இப்போதே சொல்லப்பட்டால், படத்தின் நீளம் பெருகும், அப்படி நேரம் குறைக்கப்பட்டால் கதை இடையில் தொங்கும், இந்த சுவை அதில் இருக்காது. ஆக ஒரு கை தேர்ந்த கலைஞன் இதை இப்படித்தான் காட்ட முடியும். அதை கமல் செய்திருக்கிறார். ஆனால் அதுவே பிரச்சினைக்கு காரணமாகிவிட்டது என்பது புதிராகத்தான் இருக்கிறது.
இப்படி ஒரு படம் தமிழகத்தில் எதிர்க்கப்பட்டு தடைசெய்யப்பட்டது என்பது என்னளவில் தமிழர்களுக்கு ஒரு இழப்பாகத்தான் படுகிறது. நடந்தவை குறித்து சொல்வதற்கு எனக்கு நிறைய உண்டு. ஆனால் தமிழன் ஒவ்வொருவனும், இதை பார்த்தபின்னர், புரிந்துகொள்வான் எனும் காரணத்தாலும், எங்கள் சேதுநாட்டில் பிறந்த கலைஞன், உலகத்தரம் வாய்ந்த சினிமா இயக்கி, தனக்கும், தரணிவாழ்தமிழர்களுக்கும் பெருமை சேர்த்திருக்கும் வேளையில், நடந்து முடிந்த  சிறுமைத்தனத்துக்குள் என் சிந்தையை செலுத்திட விரும்பவில்லை. கத்தரிக்கப்பட்ட, ஒலிநிறுத்தப்பட காட்சிகள் எவையென்று எனக்கு தெரியாது. அவை கதையின் கருத்தில் கைவைத்துவிடக்கூடாது என்பதுதான் என் கவலை. தமிழ்சினிமா தன் நிலையை உயர்த்திக்கொண்டிருக்கும் இந்த உன்னதமான படத்தை, வாய்ப்பிருக்கும் அத்தனை நண்பர்களும் திரையரங்கில் கண்டு மகிழவேண்டும் என்பது என் வேண்டுகோள்.
யாரென்று தெரிகிறதா.....?  படத்தின் திருப்புமுனையாக, எல்லோரையும் இருக்கையின் முனைக்கு இழுத்துவந்த, முதல் சண்டைக்காட்சியின் பின்னொலிதான் இந்த பாடல். ஆம் தெரிகிறது.
 நீ பெரும் கலைஞன்.. நிரந்தர இளைஞன்.... தடைகளை மீறி படம் வெளிவரப்போகிறது. உலகத்தமிழினமே... இந்தியத்திரையுலகம்  கமல் எனும் கலைஞானியின் மூலம் இன்னொரு பிறப்பெடுத்திருக்கும் இந்த திரைப்படத்தை கண்டு மகிழ்ந்திடுக. அதை செய்துமுடித்தவன் தமிழன் எனும் பெருமையில் பங்குகொள்க....அனைவரும் திரண்டு வந்து படத்தை திரையரங்கில் பார்ப்பதே அந்த உன்னத கலைஞனுக்கு நாம் காட்டும் ஆதரவு. நன்றிகள்.
படம் பார்த்த பாலுமகேந்திரா, இனி கமல்ஹாசன் உலகஇயக்குனர் என்று புகழ்ந்தார். அது உண்மையான வார்த்தை என்பதை படம் பார்க்கும் ஒவ்வொருவரும் உணரலாம். படத்தில் நிறைய கேள்விகள் கேட்க இடம் உண்டு. ஆனால் அவை விஸ்வரூபம்- 2-  ல் விளக்கப்படலாம் என்றே நினைக்கிறேன். இசைஞானி இளையராஜா, நடிகர்திலகம் சிவாஜிகணேசன் போன்றோர்களுடன் பணியாற்றிய எனக்கு, இத்தனை ஞானம் வரவில்லை என்றால், நான் முட்டாள் இல்லையா என்று கமல் தனது அறிவுக்கு காரணமானவர்களை காரணம் காட்டினார். அந்த நன்றி  ஒவ்வொரு கலைஞனுக்கும் அவசியம். கமல் கதக் நாட்டியமாடும் முதல் பாடல் அருமை. பெண்தன்மை கொண்ட பிராமண கணவனாக, நடன குருவாக, இந்திய உளவுத்துறை அலுவலராக, தீவிரவாதியாக, அந்த கலைஞனின் ஒவ்வொரு அரிதாரத்திலும் தெரியும் தனித்தனி அலங்காரத்தையும், அத்தனையையும் பிரித்துக்காட்டும் அவனது அங்க அசைவுகளையும் திரையரைங்கில் குடும்பத்துடன் பார்த்து மகிழுங்கள்.


மங்களூரில் நமக்கு படம் குறித்த தகவலை சொல்லி, ஆசையுடன் நம்மை விருந்துக்கும் அழைத்த என் அன்புக்குரிய ஐயா, இந்தியன் வங்கியின் மேலாளர், திருமிகு ஜி.டி.கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கு நன்றி சொல்லி நிறைவு செய்கிறோம். நன்றிகள்.